Saturday, May 4, 2013

பிகாஸோவின் குவர்னிகா - [Findings]


(Guernica) குவர்னிகா எனும் இந்த ஓவியம் 20 ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சி படைப்பு என புகழப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த ஓவியத்தை 1937 ல் வரைந்தார். கேன்வாஸில் வரையப்பட்ட இந்த ஓவியம் (ஆயில் பெயிண்டிங்) சுமார் 11 அடி உயரமும் 25 அடி நீளமும் கொண்டது. (மேல் பகுதிகளை ஏணி இல்லாமல் வரைய முடியாது.)  பிகாஸோ பாரிஸ் உலக விழாவில் (செப்.1938) இதை காட்சிப்படுத்தினார்.

இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்கு எதிரான கொள்கையை சித்தரிக்கிறது. உலகப்போரினால் குவர்னிகா மக்கள் பட்ட துன்பதை, போரின் கொடுமையை,அடக்குமுறையை சாடுகிறது.

ஸ்பெயின் தேசம் நாஜிக்களால்(ஜெர்மனி) விமான குண்டுதாக்குதலுக்குள்ள வரலாற்றை சொல்லுகிறது இவ் ஓவியம்.


பின்னாளில் ஒரு ஜெர்மன் அதிகாரி ”நீங்கள் தான் இதை வரைந்ததா? ”என கேட்டார். அதற்கு பிகாஸோ சொன்ன பதில் “இல்லை..இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள்”.




மேலோட்டமாக பார்த்தால் இவ்வோவியத்தின் கூறுகளை புரிந்து கொள்ள முடியாது.

முதலில் நமக்கு தெரிவது கூரையில் எரியும் மின்விளக்கு. இது குண்டு தாக்குதலை சொல்கிறது. ஏற்பட்ட விளைவுகளை காணச் சொல்கிறது பெரிய கண் உருவம். ஞான கண்ணை திறக்க சொல்கிறது. மின் விளக்கின் பின்னே இருளில் சிறகு ஒடிக்கப்பட்ட பறவை.


குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை. அதன் கதறலை வெளித்தள்ளும் நாக்குகள் உணர்த்துகிறது. அந்த குதிரையின் கால்களும் உடைக்கப்பட்டு உள்ளது. எலும்புகளின் சிதறல்கள்..

இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய்.



எருது ஸ்பெயினின் கலாச்சார குறியீடு. அதன் முகத்தில் மனிதனின் உருவமும் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது. மாட்டின் வால் தீயின் நாக்குகள்... கொழுந்து விட்டு எரிவதாக காட்டப்பட்டுள்ளது.

தீபற்றி எரியும் வீட்டில் (பின்புல ஜன்னல்) தீ நாக்குகளில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண். (இவ்வுருவம் பெண்ணாகவும் தெரிகிறது ஆணாகவும் தெரிகிறது)

வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய். கைகளில் உடைந்த வாள். அந்த கையின் பின்புலத்தில் மலர் சமாதானத்தின் குறியீடு. போர் தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. காலில் நசுக்கப்படும் தலை கவசம்.



திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண். கைகளில் அணைத்து பிடித்த விளக்கு போர் அற்ற சூழல் வேண்டும் என்பதன் குறியீடு.




PABLO PICASSO [ 1881–1973 ]


பாப்லோ பிகாஸோ ஸ்பெயின் தேசத்தில் மெலேகா (malaga)வில் பிறந்தவர். பாரிஸில் வாழ்ந்தவர் அதற்கு முன் இளவயதில் பார்ஸிலோனாவில் வளர்ந்தவர். முப்பரிமாண ஓவியங்களின் முன்னோடி. 92 ஆவது வயதுவரை வாழ்ந்தார்.


No comments:

Post a Comment

Popular Posts